இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த தமிழிசைக்கு எதிர்பாராத ஏற்பட்ட தோல்வியால் அமைச்சர் பதவியும் கிடைக்காமல், கட்சியிலும் உரிய மதிப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தான் தமிழிசை, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரின் ஆனந்தனின் மகள், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பிஎஸ் பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ பட்டமும் பெற்றார் தமிழிசை. பின்னர் கனடாவில் மருத்துவ பயிற்சி பெற்றார். தமிழகத்தில் இரு பெரும் அரசியல் ஆளுமைகளான எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரின் தலைமையில் தமிழிசையின் திருமணம் நடைபெற்றது.
வாஜ்பாயின் மீது இருந்த ஈர்ப்பு, மரியாதையால் 1999-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2001-ம் ஆண்டு பாஜகவின் மாநில மருத்துவ செயலாளராக நியமிக்கப்ப்ட்டார். பின்ன பின்னர் 2010-ம் ஆண்டு தமிழக பாஜக மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் 2013-ம் ஆண்டு பாஜக தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவரானார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழகத்தில் பாஜக பிரபலமடைவதற்கு தமிழிசையும் முக்கிய காரணமாக இருந்தார்.
தமிழக சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் 5 முறை போட்டியிட்ட அவர் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இருந்த போதும் பாஜகவிற்காக தொடர்ந்து களப்பணியாற்றி வந்தார். எந்த போராட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக இருப்பார். அப்போது தான் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை 2019ஆம் ஆண்டு களம் இறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பாஜக தலைமை அவரை கை விடவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புதுவை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இரண்டு மாநில ஆளுநர் பதவி என்ற பந்தாவாக இருந்த தமிழிசை, மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தவருக்கு தேர்தலும் கை கொடுக்கவில்லை, கட்சியும் புதிதாக மாறி இருப்பது தமிழிசையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதன் காரணமாக என்ன செய்யலாம் என்ற குழப்பமான மன நிலையில் தமிழிசை உள்ளதாக கூறப்படுகிறது.