இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கும் இந்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here