காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் சகோதரர்கள். எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் தீர்க்கப்படும் என கர்நாடக அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த கர்நாடக அமைச்சர் முனியப்பாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது அமைச்சருடன் சென்றவர்கள் செல்போனுடன் சென்றதால் காவலர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கர்நாடக அமைச்சருடன் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட கூடுதலாக கார்கள் வந்ததால் போலீசார் அவற்றின் பதிவெண்ணை குறித்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அமைச்சர் முனியப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியடையும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளது.” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அரசியலில் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். மக்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அமைச்சர் முனியப்பா, தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளனர். எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here