ஜெமிமா ரோட்ரிக்ஸ்: கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான இன்னிங்ஸ்!
மும்பையில் உள்ள டி. ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது. 339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, இளம் வீராங்கனை Jemimah ரோட்ரிக்ஸ் அடித்த அபார சதம், திருப்புமுனையாக அமைந்தது.
Jemimah (ஜெமிமா) ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 134 பந்துகளில் 127 ரன்கள் (14 பவுண்டரிகள்) குவித்து, அணியை வெற்றிக் கரைக்கு அழைத்துச் சென்றார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (339 ரன்கள்) வெற்றிகரமாக எட்டிய அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா இதன் மூலம் படைத்துள்ளது. அத்துடன், உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 15 வெற்றிகளையும் இந்திய அணி முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, மூன்றாவது முறையாக மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் நவம்பர் 2ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கடினமான காலமும் கனவு இன்னிங்ஸும்: ஜெமிமா பகிர்வு
ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய Jemimah (ஜெமிமா) ரோட்ரிக்ஸ், தனது உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். “நான் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், நான் இதை தனியாகச் செய்யவில்லை. எனது அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு மாதம் தனக்கு மிகக் கடினமான காலமாக இருந்ததாகவும், கிட்டத்தட்ட தினந்தோறும் அழுதுகொண்டிருந்ததாகவும் ஜெமிமா தெரிவித்தார். மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர், பதட்டத்துடனேயே இருந்திருக்கிறார்.
“இதுவரை என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் இதற்கான ஒரு ஏற்பாடுதான். மோசமான பல விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்தன, என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. மனரீதியாக நான் நன்றாக இல்லை, பதட்டத்துடன் இருந்தேன். ஆனால், கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார் என்பதை நான் அறிந்திருந்தேன். முடிவில், நான் பைபிளில் இருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டினேன் – அசைக்காமல் நிற்க வேண்டும், கடவுள் எனக்காகப் போராடுவார் என்று. நான் அங்கு நின்றேன், அவர் எனக்காகப் போராடினார்,” என்று Jemimah ரோட்ரிக்ஸ் கூறினார்.
திடீர் பேட்டிங் ஆர்டர் மாற்றம்
3வது இடத்தில் பேட்டிங் செய்தது பற்றி கேட்டபோது Jemimah (ஜெமிமா) ரோட்ரிக்ஸ் ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டார். “நான் குளித்துக் கொண்டிருந்தபோது, நான் எப்போது ஆட வேண்டுமோ அப்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொன்னேன். களத்திற்குச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் 3வது இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறேன் என்று சொன்னார்கள். திடீரென வந்து நீங்கள் களமிறங்குங்கள் என்றார்கள். அது எனக்கு சாதகமாக மாறி உள்ளது” என்று ஜெமிமா கூறினார்.
விராட் கோலியின் அதே நம்பர் 3 இடத்தில் களமிறங்கிய ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா (24) அவுட்டான பிறகு, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருடன் இணைந்தார். இருவரும் இணைந்து ரன்ரேட்டை சற்றும் குறையாமல் பார்த்துக்கொண்டதோடு, 167 ரன்கள் என்ற அபார பார்ட்னர்ஷிப்பை அமைத்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அமைக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
ஆஸ்திரேலியாவின் பவர் பேட்டிங்
இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஓபனர் ஃபோப் லிட்ச்ஃபீல்டின் அதிரடி சதம் (119 ரன்கள்) மற்றும் எல்லிஸ் பெர்ரி (77 ரன்கள்), ஆஷ்லே கார்ட்னர் (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால், 49.5 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு ஒரு மெகா சவாலை ஏற்படுத்தியது.
இந்திய பந்துவீச்சாளர்களில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்தியாவின் வரலாற்று சேஸிங்
339 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா (10 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (24 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். எனினும், Jemimah ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (89 ரன்கள்) நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஹர்மன்பிரீத் அவுட் ஆன பிறகு, தீப்தி ஷர்மா (24 ரன்கள்), ரிச்சா கோஷ் (26 ரன்கள்) மற்றும் அமன்ஜோத் கௌர் (ஆட்டமிழக்காமல் 15 ரன்கள்) ஆகியோர் ஜெமிமாவுக்கு பக்கபலமாக நின்று, இந்திய அணியை 48.3 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்து, வெற்றியைப் பதிவு செய்ய உதவினர்.
Jemimah ரோட்ரிக்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் ஆடியது, உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. மேலும், ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். உலகக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பெற்றார்.

