இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால், அது ஒரு சாதாரண விளையாட்டு அல்ல, அது உலக கிரிக்கெட் ரசிகர்களால் எப்போது நடக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு திருவிழா. டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வடிவத்திலும் இந்த அணிகள் மோதும்போது, பரபரப்புக்கும் சவாலுக்கும் பஞ்சம் இருக்காது. சமீபத்திய காலங்களில் 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி, மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டிகள் போன்றவை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத போட்டிகளாக இருக்கின்றன. ஆனால், இந்த ஆட்டங்கள் அனைத்தையும் தாண்டி, ஒரு போட்டியைப் பற்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்றும் கனவில் கூட நினைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அதுதான் 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி.
இந்திய அணியின் தன்னம்பிக்கையை தகர்த்த போட்டி
1983-ம் ஆண்டு உலகக் கோப்பை, 1984-ம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் 1985-ம் ஆண்டு சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன்ஸ் ஆகிய பட்டங்களை வென்ற பிறகு இந்திய அணி அதன் உச்சத்தில் இருந்தது. அப்போது, 1986-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (75 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (92 ரன்கள்) ஆகியோர் சிறந்த தொடக்கத்தை அளித்தனர். அடுத்து களமிறங்கிய வெங்சர்க்காரும் 50 ரன்கள் அடிக்க, இந்திய அணி 216/3 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பிறகு வந்த கிர்தி ஆசாத், கபில்தேவ், சேட்டன் சர்மா, ரவி சாஸ்திரி போன்ற நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜாவேத் மியான்தத் என்ற ஒற்றை மனிதன்
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 61 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நட்சத்திர வீரர் ஜாவேத் மியான்தத் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். மற்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 241 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை நெருங்கியது. இந்திய ரசிகர்கள் அனைவரும் வெற்றி உறுதியானது என்று உற்சாகமடைந்தனர். அப்போது, 11-வது வீரர் பேட்டிங் செய்ய களமிறங்க, பாகிஸ்தான் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர் சேட்டன் சர்மா வீசிய இறுதிப் பந்தில், பாகிஸ்தான் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை, இந்தியாவுக்கு 1 விக்கெட் தேவை என்ற நிலை இருந்தது.
கடைசிப் பந்தில் சிக்சர்.. மறக்க முடியாத தோல்வி
அழுத்தம் இரு அணிக்கும் அதிகரிக்க, ரசிகர்களும் பதற்றத்துடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சேட்டன் சர்மா வீசிய பந்தை, ஒரு பிரமாண்டமான சிக்சராக பறக்கவிட்ட ஜாவேத் மியான்தத், பாகிஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்த மியான்தத், பாகிஸ்தானுக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இரண்டு அணிகளுக்கும் ஒரு ரோலர் கோஸ்டர் போட்டியாக இருந்த 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி, இன்றளவும் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்தத் தோல்வி இந்திய அணியின் தன்னம்பிக்கையை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நசுக்கியது என்று அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் ஒருமுறை மனம் திறந்து பேசியிருந்தார். இந்த தோல்வி குறித்து நினைத்தால் இன்றும் தூக்கம் வராது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். அந்தப் போட்டியில் சேட்டன் சர்மா ஸ்லோ யார்க்கர் வீச நினைத்ததாகவும், ஆனால் அது லோ ஃபுல் டாஸாக மாறியதாகவும் அவர் கூறினார். இந்த ஒரு தோல்வி, இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தின் மீது ஒரு இருண்ட அத்தியாயத்தை எழுதியது என்றே கூறலாம்.