Conway: மவுண்ட் மௌங்கானுயியில் அரங்கேறிய மிரட்டல் ஆட்டம்
நியூசிலாந்தின் மவுண்ட் மௌங்கானுயியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட்டின் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உள்நாட்டில் பேட்டிங்கைத் தேர்வு செய்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். அந்தத் துணிச்சலான முடிவிற்குப் பலனாக, டெவோன் கான்வே மற்றும் டாம் லாதம் ஜோடி 86.4 ஓவர்களில் 323 ரன்கள் குவித்து மலைக்கவைத்துள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதில் டெவோன் கான்வே 178 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். டாம் லாதம் 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் ஆட்டமிழந்தார்.
உலக சாதனைகளைச் சரித்த பார்ட்னர்ஷிப்
இந்த ஜோடி இன்று புரிந்த சாதனைகள் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில், இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஜோடியின் 317 ரன்கள் சாதனையை முறியடித்து, அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் என்ற உலக சாதனையை கான்வே – லாதம் ஜோடி படைத்துள்ளது.


மேலும், 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 16-வது தொடக்க ஜோடி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர். 2025-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவே ஆகும். இவர்களின் ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நாள் முழுவதும் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல் திணறினர்.
தகர்க்கப்பட்ட 95 ஆண்டுகால நியூசிலாந்து சாதனைகள்
நியூசிலாந்து மண்ணைப் பொறுத்தவரை, 1930-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டம்பஸ்டர் மற்றும் மில்ஸ் ஜோடி படைத்த 276 ரன்கள் சாதனையே 95 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. இன்று டெவோன் கான்வே மற்றும் லாதம் அந்த சாதனையைத் தவிடுபொடியாக்கினர். நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் 387 ரன்களுக்குப் பிறகு (1972-ல் டர்னர்/ஜார்விஸ்), இதுவே இரண்டாவது அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் ஆகும்.
அதுமட்டுமின்றி, நியூசிலாந்து வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற பெருமையையும் (1,721 ரன்கள்) இவர்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் ரைட் மற்றும் எட்கர் ஜோடியின் நீண்டகால சாதனையை கான்வே – லாதம் ஜோடி முறியடித்துள்ளது.
ஆதிக்கத்தின் உச்சம்: கான்வே மற்றும் லாதமின் மிரட்டல் இன்னிங்ஸ்
டெவோன் கான்வே தனது இன்னிங்ஸில் 279 பந்துகளைச் சந்தித்த 25 பவுண்டரிகளை விளாசினார். இது அவரது 6-வது டெஸ்ட் சதமாகும். குறிப்பாக 2022-க்குப் பிறகு உள்நாட்டில் அவர் அடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் கேப்டன் லாதம் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 137 ரன்கள் எடுத்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, 54-வது ஓவரில் 200 ரன்களையும், 80-வது ஓவரில் 300 ரன்களையும் கடந்து அதிரடி காட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த டெவோன் கான்வே, நாளை இரட்டைச் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
பே ஓவல் மைதானத்தின் புதிய சாதனை
மவுண்ட் மௌங்கானுயியின் பே ஓவல் மைதானத்தில் இதற்கு முன்பு எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 261 ரன்கள் (வாட்லிங் – சான்ட்னர்) மட்டுமே. இன்று கான்வே – லாதம் ஜோடி அந்த சாதனையையும் முறியடித்து, இந்த மைதானத்தில் 200 மற்றும் 300 ரன்களைக் கடந்த முதல் தொடக்க ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.


