விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக, சோழ நாட்டின் தலைநகராக இருந்த கும்பகோணத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில், பஞ்சரங்கத் தலங்களில் முக்கியமானதாகும். காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையைக் கொண்டது. இங்கு கோயில் கொண்ட பெருமாள் சாரங்கபாணி என அழைக்கப்படுகிறார். சாரங்கம் என்பது விஷ்ணுவின் வில்லின் பெயராகும். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பொற்றாமரைக் குளம் என்று அழைக்கப்படும் கோயிலின் குளம், மேற்கு நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது. கோயில் வளாகத்தில் சாரங்கபாணி, கோமளவள்ளி தாயார் ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன.
புராண வரலாறு
ஹேம ரிஷி முனிவர், விஷ்ணுவின் மனைவியான லட்சுமியை தனது மகளாகப் பெற விரும்பினார். இதற்காக பொற்றாமரைக் குளத்தின் கரையில் கடும் தவம் புரிந்தார். முனிவரின் தவத்திற்கு மெச்சி, லட்சுமி தாமரை மலரில் இருந்து தோன்றினார். தாமரைக்கு வடமொழியில் கோமளம் என்று பொருள். அதனால், தாயாருக்கு கோமளவள்ளி எனப் பெயர் வந்தது. லட்சுமியை மணந்துகொள்ள, மகாவிஷ்ணு சாரங்கம் எனப்படும் தன் வில்லுடன், தேர் மீது வைகுண்டத்தில் இருந்து இறங்கிவந்தார். முனிவரின் விருப்பப்படி, மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இக்கோயில், திருக்குடந்தையில் அமைந்துள்ள மிகப்பெரிய விஷ்ணு கோயில்களில் ஒன்றாகும்.
போக்குவரத்து விவரம்
விமானம்: திருச்சி விமான நிலையம் 100 கி.மீ தொலைவில் உள்ளது.
ரயில்: கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் உள்ளது.
பேருந்து: கும்பகோணம் பேருந்து நிலையம் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
உள்ளூர் போக்குவரத்து: ஆட்டோ, வாடகை கார் வசதிகள் உள்ளன.
முகவரி: சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு – 612001.