சென்னை: ரத்த சோகை பாதிப்பை, பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. அத்துடன், மாணவர்களிடம் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக, ஆண்களுக்கு ஹீமோகுளோபின் (Hb) அளவானது, 13 கிராம்/100 மில்லிக்கு கீழும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/100 மில்லிக்கு கீழும் இருப்பது வேண்டும் என்பது ரத்தசோகை என ஆய்வில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசின் ஆய்வின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 52.9 சதவீத பெண்களும், 24.6 சதவீத ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், சென்னையை பொறுத்தவரை 4 சதவீத பெண்களும், 4 சதவீத ஆண்களும் மோசமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கான ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆண்களில் 4-ல் ஒருவருக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.. இதில், மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் 8.7 லட்சம் மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 57 சதவீதத்தினர் ரத்த சோகை பாதிப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 2 சதவீத பெண்களுக்கு தீவிர பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதேபோல், 6.83 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 43 சதவீத பேருக்கு பாதிப்பும், ஒரு சதவீதத்தினருக்கு தீவிர பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் மத்தியில் மோசமான ரத்தசோகை பாதிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் மிக அதிகமாக 10 சதவீதம் பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் 7 சதவீதம் பேருக்கும், ஈரோட்டில் 6 சதவீதம் பேருக்கும் உள்ளது. ஆண்கள் மத்தியில் மோசமான ரத்தசோகை பாதிப்பு திருப்பூரில் 8 சதவீதம் பேருக்கும், திருவள்ளூரில் 4 சதவீதம் பேக்கும், கோவையில் 3 சதவீதம் பேருக்கும் உள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் செய்யப்பட்ட தனியார் ஆய்வில் (ஜீவதன் சண்முகம் மற்றும் குழுவினர்) 10-19 வயது மாணவர்களிடேயே ரத்தசோகை பாதிப்பு, பெண்களிடத்தில் அதிகமாக 93.8 சதவீதம் பேரிடமும், 83.9 சதவீதம் பேரிடமும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சொல்லும்போது, “ரத்த சோகை பாதிப்பை பள்ளி அளவிலேயே மாணவர்களிடம் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பு கண்டறியப்பட்ட 11,253 பேருக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஊசி மூலமாக இரும்பு சத்து மருந்துகள் உடலில் செலுத்தப்பட்டு வருகிறது.
மோசமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட 10 சதவீத மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவைப்பட்டால் ரத்தம் ஏற்றியும், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளும் கொடுக்கப்பட்டும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இரும்புச்சத்து குறைப்பாட்டினால் இந்த ரத்தசோகை ஏற்படுகிறது. இதற்கு கருவேப்பிலை, முருங்கை கீரை போன்ற உள்ளூர் இரும்புச்சத்து மிக்க சத்துணவுகளை பயன்படுத்தி பலனை அடைய வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பிரசவம் முடிந்த பெண்களுக்கு, அனிமீயா பிரச்சனையும் ஏற்படும் என்பதால், இந்த கறிவேப்பிலையை அடிக்கடி சட்னி செய்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தாலே வயிறு சுத்தமாகும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. அதேபோல, மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்துக்கள் முருங்கை கீரையில் உள்ளது என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.