சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது, ​​8 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த 8 வழக்குகளும் பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்கக் கோரி உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதனத்துக்கு எதிரான மாநாட்டை நடத்திய உதயநிதி, வெங்கடேஷ், ஆதவன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடரக் கோரி பெங்களூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கு எதிராக வெங்கடேஷ், ஆதவன் மற்றும் மதுகூர் ராமலிங்கம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் நடவடிக்கைக்கு தடை கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்சித், இந்த வழக்கில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 25) காலை நீதிபதி சரவணா முன்பு ஆஜரானார்.

அப்போது உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவருக்கு ஜாமின் வழங்க கோரிக்கை வைத்தும், வழக்கில் நேரில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரியும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் மனு மீதான விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here