மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை 2024- 25 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
“மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தேர்வு குழு சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கு மாணவர்கள் சேர ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதுவரை 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 2,721 விண்ணப்பங்கள் கடந்தாண்டை விட அதிகம்.
3,733 விண்ணப்பங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு பெறப்பட்டுள்ளது. 343 விளையாட்டுப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. 451 முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டிற்கு பெறப்பட்டுள்ளது. மேலும், 133 மாற்றுத்திறனாளிகளுக்கு பெறப்பட்டுள்ளது.
1683 பல் மருத்துவ படிப்புகள் மொத்தம் உள்ளன. 6630 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் மொத்தம் உள்ளன. 126 அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 29,429 விண்ணப்பங்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.அரசு உள் ஒதுக்கீட்டில் சேர 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3683 விண்ணப்பங்கள் தகுதி பெற்றது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.