அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இணையப் போவதை உறுதி செய்தர் டிடிவி தினகரன்

Priya
13 Views
1 Min Read

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெரும் திருப்புமுனையைச் சந்தித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தனித்துப் பயணித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் T.T.V. Dhinakaran, இன்று (ஜனவரி 21, 2026) அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். சென்னை அடையாறில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த எடப்பாடி பழனிசாமி தரப்புடன் மீண்டும் இணைவது குறித்துப் பேசிய T.T.V. Dhinakaran, “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் நடப்பது பங்காளிச் சண்டைதான். ‘இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்துவிடல்’ என்ற வள்ளுவரின் வாக்குப்படி, பழைய கசப்புகளை மறந்து தமிழகத்தின் நலனுக்காகவும், அம்மாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்துக் கூட்டணியை உறுதிப்படுத்தினார். வரும் ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருமே ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாமக, தமாகா போன்ற கட்சிகள் இணைந்துள்ள இந்தக் கூட்டணியில் அமமுகவும் இணைந்திருப்பது, 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியைப் பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply