2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஇஅதிமுக தலைமையிலான மெகா கூட்டணி குறித்த முக்கியத் தகவலை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ (Sellur Raju) பகிர்ந்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அஇஅதிமுக கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்குச் சாதகமான பதிலளித்தார்.
செல்லூர் ராஜூ தனது பேட்டியில், “திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எங்களோடு இணைவதை நாங்கள் வரவேற்கிறோம். டி.டி.வி. தினகரன் அவர்கள் ADMK தலைமையிலான கூட்டணிக்கு வந்தால், அவரை மனப்பூர்வமாக வரவேற்போம்” என்று தெரிவித்தார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து வருவதாகவும், அதில் பழைய நண்பர்கள் இணைவது கூட்டணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைப்பதில் அஇஅதிமுக நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்த சூழலில், செல்லூர் ராஜூவின் இந்த வெளிப்படையான அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் ADMK தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட தினகரனின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் செல்லூர் ராஜூ சுட்டிக்காட்டினார்.

