சென்னையில், தேனாம்பேட்டை கலைஞர் அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீ ராஜா சொக்கர் இல்ல திருமணவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார் . அதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,
ஒருகாலத்தில் திமுகவும், காங்கிரஸும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில், அதே சிந்தனையோடு நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக இருக்கிற அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மேல் காட்டக்கூடிய அன்பை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியாது.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் நான் அழைக்கிறபோது யாரையும் சகோதரர் என்று நான் சொன்னது கிடையாது. ஆனால் ராகுல்காந்தியை பற்றி நான் பேசுகிறபோது அருமை சகோதரர் என்று நான் சொல்வதுண்டு. அதற்கு காரணம், அவர் என்னை ” அண்ணன், மூத்த அண்ணன் ” என்றே அழைப்பார். தொலைபேசியில் பேசினாலும் சரி நேரில் பேசினாலும் சரி ” My dear brother” என்று தான் சொல்லுவார். அவற்றையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.
தனிமனிதர்களின் நலனை விட நாட்டினுடைய நலன் முக்கியம் என்ற உணர்வோடு அந்த நட்புணர்வு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக- காங்கிரஸ் இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டு இருக்க கூடிய இந்த புரிதலும் கொள்கை உணர்வும் நிச்சயம் இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை காப்பற்றும் அது உறுதி என உணர்வு பூர்வமாக பேசினார்.

