அதிமுகவின் 54 -வது தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,
“தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின், புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது.
வருகின்ற 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைவதை எத்தனை சக்திகள் ஒன்றுகூடி வந்தாலும், கழகத்தின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் உயர்வுக்காகவும். கழகத்தின் வெற்றிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன்.
கழகம் 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, சட்டம்-ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள இந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, அல்லும் பகலும் கண்துஞ்சாது களப் பணியாற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா-வின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்திட இந்த இனிய நன்னாளில், நாம் அனைவரும் உளமார உறுதியேற்போம்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.