தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு Political Shift நிகழ்ந்துள்ளது. பாமகவின் மூத்த தலைவரும், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன், காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளார்.
டெல்லி பயணம்
பாமக இளைஞரணித் தலைவராக இருந்த தமிழ்குமரன், இன்று டெல்லிக்கு விரைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் முன்னிலையில் அவர் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீட் உறுதி?
காங்கிரஸில் இணையும் தமிழ்குமரனுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சியின் தலைமை மற்றும் முடிவுகள் எடுப்பதில் நிலவி வந்த பனிப்போர், தமிழ்குமரனின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழ்குமரனை இளைஞரணித் தலைவராக நியமித்தபோது அன்புமணி தரப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாமக-வுக்குப் பின்னடைவா?
ஜி.கே.மணி பாமக-வின் மிக முக்கியமான தூண்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவரது மகனே கூட்டணி மாறி காங்கிரஸ் பக்கம் செல்வது, பாமக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக-வின் வாக்கு வங்கியில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

