தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு (Gas Shortage) மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு குறித்து, ஒன்றிய பாஜக அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒன்றிய அரசு செய்திகளைத் திசைதிருப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களைப் பீதியடையச் செய்த பிரதமர் பேச்சு
“ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ‘கோவிட் காலத்தைப் போல’ எனப் பேசியது மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான உணவகங்கள் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
திசைதிருப்பும் ‘ஸ்கிரிப்ட்’
எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீவிர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு, அந்தப் பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தற்போது ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) என்ற புதிய ஸ்கிரிப்ட்டைக் கையிலெடுத்துள்ளதாக அவர் சாடினார். மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசுக்குத் துப்பில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுக-வுக்குப் பதில்
மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேள்வி எழுப்பும் அதிமுக-வுக்குப் பதிலளித்த முதலமைச்சர், “சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் அதிகார வரம்பிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜக அரசு என்ன செய்கிறது என்பதே மக்களின் கேள்வி. பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக அதிமுக செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

