தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான ரகசிய உறவு குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் ஒவ்வொரு நகர்வும் டெல்லியில் இருந்துதான் தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
அமித் ஷாவின் ஸ்கிரிப்ட்
“அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட வேண்டும், எந்தச் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதை முடிவெடுப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல; ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அமித் ஷா தயாரித்துக் கொடுக்கும் Alliance Strategy மற்றும் ஸ்கிரிப்டை மாற்றாமல் அப்படியே எடப்பாடி பழனிசாமி படித்து வருகிறார். என்னதான் மேக்கப் போட்டுத் தன்னைச் சுதந்திரமானவராகக் காட்டிக்கொண்டாலும், எடப்பாடியின் ஒவ்வொரு அறிவிப்புக்குப் பின்னாலும் அமித் ஷா இருக்கிறார் என்பதுதான் உண்மை” என அமைச்சர் சாடினார்.
பாஜகவுக்கு முக்கியத்துவம்
தமிழ்நாட்டில் நோட்டாவுக்குக் கீழே வாக்கு வங்கிக் கொண்டிருந்த பாஜகவுக்கு, அதிமுக அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துத் தூக்கி விடுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடச் சம்மதித்திருப்பது, அதிமுகவின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் தீர்ப்பு
“தமிழக மக்கள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைப் பார்த்து வருகிறார்கள். டெல்லியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாங்கத்தை மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் அமர்த்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். வரும் ஏப்ரல் 23-ம் தேதி மக்கள் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

