அதிமுக காலி பாத்திரம், திமுக நிறைகுடம்; மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும்: அமைச்சர் சேகர்பாபு

Priya
9 Views
1 Min Read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திமுக அரசின் சாதனைகளையும் அதிமுக-வின் பலவீனங்களையும் பட்டியலிட்டார். குறிப்பாக, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியின் முகம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வடசென்னை வளர்ச்சித் திட்டம் ஒரு உன்னதமான திட்டம். இதன் மூலம் அறிவுசார் மையங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள், முதலமைச்சர் சமுதாய மண்டபங்கள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் மட்டும் வடசென்னையில் 3 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 1,479 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, வெள்ள பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன” என Dravidian Model சாதனைகளை அவர் விளக்கினார்.

எடப்பாடி பழனிசாமிக்குச் சவால்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய அமைச்சர், “புயல், வெள்ளம் மற்றும் கொரோனா காலங்களில் மக்கள் தவித்தபோது எட்டிப்பார்க்காதவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மக்களைக் காத்து மீட்டவர் மு.க.ஸ்டாலின். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஏற்கனவே திமுக செயல்படுத்திய திட்டங்களின் நகல்தான். அதிமுக என்பது ஒரு காலி பாத்திரம், திமுக என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறைகுடம்” என்று விமர்சித்தார்.

கூட்டணி குறித்த விமர்சனம்

அதிமுக கூட்டணியில் உள்ள குழப்பங்கள் குறித்துப் பேசிய அவர், “அதிமுக கூட்டணிக்குத் தான் தான் தலைமை என இபிஎஸ் கூறுகிறார். ஆனால், அவர் கூட்டணியில் உள்ள தமாகா போன்ற கட்சிகள் பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதிலிருந்தே அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்பது தெரிகிறது. அன்று அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு 41 இடங்களைக் கொடுத்ததுதான் அதிமுக-வின் சாதனை” எனக் கேலி செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply