தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ கீழ் இன்று காலை 1.31 கோடி பயனாளிகளின் வங்கித் தாள்களில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், எதிர்க்கட்சிகளின் சதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக் கூடாது என்று சதி செய்த பாஜக – அதிமுக கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பெண்கள் கையில் கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும் கவனத்தோடும் செலவிடப்படும்; அது வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படும். எதிர்காலத்தில் இந்த உரிமைத் தொகை மாதம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. பெண்கள் இந்தத் தொகையைத் தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நிதிப் பரிமாற்றத்தைத் தடுக்க எதிர்க்கட்சிகள் சட்ட ரீதியான அல்லது தேர்தல் ஆணைய ரீதியான முட்டுக்கட்டைகளைப் போட முயன்றதைச் சுட்டிக்காட்டியே, ஜோதிமணி இதனை “சதி முறியடிப்பு” என்று வர்ணித்துள்ளார். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் உறுதிப்பாட்டையும், முதலமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த வேகத்தையும் இந்தப் பதிவு வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

