பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

Priya
5 Views
1 Min Read

தமிழகத்தின் தொன்மை மற்றும் கலாச்சாரப் பெருமையை உலகுக்குக் பறைசாற்றும் வகையில், கீழடி உள்ளிட்ட 8 முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றுள்ளது. இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனைத் தமிழக அரசின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல மாதங்களாக இந்த அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாகப் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பலமுறை கடிதங்களை எழுதியிருந்தார். நீண்ட தாமதத்திற்குப் பிறகு தற்போது கிடைத்துள்ள இந்த அனுமதி மூலம், கீழடி, கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட 8 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அடுத்தகட்ட ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளன.

முதலமைச்சர் தனது பதிவில், “தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியாகவும் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்துள்ள அவர், “அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” எனச் சூளுரைத்துள்ளார்.

தமிழகத்தின் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகள், தமிழர்களின் நாகரிகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் பூர்வமாக மெய்ப்பித்து வருகின்றன. புதிய அனுமதி கிடைத்துள்ளதால், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் பணிகள் விரைவில் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply