தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (பிப்ரவரி 5, 2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மற்றும் சென்னையில் சுமார் 100.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பால்பண்ணை இந்தத் திட்டங்களில் மிக முக்கியமானதாகும். நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட இந்தப் பண்ணை மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 310 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பால் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் சுமார் 1.22 லட்சம் விவசாய மக்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம்
நுகர்வோரின் மாறிவரும் ரசனைக்கேற்ப புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்தவும், அவற்றின் தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும் சென்னை அம்பத்தூரில் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தையும் (R&D Lab) முதல்வர் திறந்து வைத்தார். ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை இது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணியாளர்களுக்குக் கருணை ஓய்வூதியம்
பால் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மாதாந்திர கருணை ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஓய்வு பெற்ற 2,335 பணியாளர்களும், தற்போது பணியில் உள்ள 13,042 பணியாளர்களும் பயன்பெறுவர். இதற்கான ஆணைகளை ஐந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கி முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆவின் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி
இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு இன்று நான்காவது இடத்தில் உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 9,089 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக 37.92 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 31 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு ஆவின் மூலம் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பண்ணை, மேற்கு மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

