சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்த ஏற்கனவே அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சிறப்பம்சமாக ரூ.22.34 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை (Air Museum) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்ரவரி 13) காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கிறார்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பழங்கால வீடுகளின் சுவர்கள், உறை கிணறுகள், பழங்காலத் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் போன்றவற்றை மக்கள் அவை இருந்த இடத்திலேயே நேரடியாகக் கண்டு வியக்கும் வகையில் இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணலூரை அடுத்த கொந்தகை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், பழங்காலத் தமிழர்களின் நகரக் கட்டுமானத் திறமையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன வசதிகள், நடைபாதைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி குழிகள் சிதையாமல் இருப்பதற்கான பாதுகாப்புக் கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழடி அகழ் வைப்பகத்தைப் போலவே, இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகமும் சிவகங்கை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தொடக்க விழாவினைத் தொடர்ந்து, இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும். தமிழக அரசின் இத்தகைய முன்னெடுப்புகள் கீழடி நாகரிகத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

