2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் Amit Shah வரும் பிப்ரவரி 14-ம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெறும் பிரம்மாண்டமான பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் பிப்ரவரி 13-ம் தேதி (நாளை மறுநாள்) இரவு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
அமித் ஷாவின் இந்தப் பயணம் தமிழக மற்றும் புதுச்சேரி பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிக்கு வரும் அவர், அங்குள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் பிப்ரவரி 14-ம் தேதி காலை, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அவர், அங்கிருந்து காரில் காரைக்கால் நகராட்சி சந்தை திடலுக்கு காலை 11:30 மணியளவில் வந்து சேருகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி பலம் குறித்துப் பேசுகிறார்.
இந்த விழாவிற்குப் பிறகு, அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்குத் திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலம் புறப்படுகிறார். சேலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி மாலையில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அவர், தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலவரம் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷாவின் இந்தப் பயணத்தை முன்னிட்டு, திருச்சியில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் நடைபெறும் ‘பாரதம் அடுத்த தசாப்தம்’ (Bharat: The Next Decade) என்ற சிறப்பு நிகழ்விலும் பங்கேற்கின்றனர். காரைக்கால் மற்றும் திருச்சியில் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

