‘வாழ்வா, சாவா’ நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டு இருக்கிறது- ஓ.பி.எஸ் அறிக்கை

'வாழ்வா, சாவா' நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டு இருக்கிறது- ஓ.பி.எஸ் அறிக்கை

Surya
46 Views
3 Min Read
Highlights
  • அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது
  • ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்
  • வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. வாழ்வா, சாவா' என்ற நிலைக்கு கழகம் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 17-10-2025 அன்று தனது 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த தருணத்தில் கழகம் கடந்து வந்த பாதையையும்,தற்போதுள்ள நிலைமையையும் நினைத்து பார்த்தால் நெஞ்சம் கலங்குகிறது.கண்களில் கண்ணீர் வடிகிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தொடர் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் இராநாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தல் தோல்வி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி, 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்வி, 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தல் தோல்வி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் தோல்வி , ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்வி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி என தொடர் தோல்விகள். இது தவிர, விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இரண்டாவது இடைத் தேர்தல்களில் நிற்கவே முடியாத அவல நிலை

“எந்தத் தொண்டனும் தலைவராகலாம்” என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அவர்கள் வகுத்த விதி மாற்றப்பட்டதையும், அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான் என்று பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீக்கியதையும் கழகத் தொண்டர்கள் ஏற்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சர்வாதிகாரத்தை கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் நிராகரித்துவிட்டார்கள்.

“The tree is known by the fruit, not by the label that is attached to the tree” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதாவது, பழத்தை வைத்துத்தான் ஒரு மரத்தை தெரிந்து கொள்ள முடியுமே தவிர அதன் மேல் ஒட்டப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து அல்ல என்பது இதன் பொருள். வெறும் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வீர வசனம் பேசுவது வெற்றிக்கு வழி வரகுக்காது.

மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்தபோது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து நின்று கிட்டத்தட்ட 45 விழுக்காடு வாக்குகளை அள்ளி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெறும் 19.29 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட 26 விழுக்காடு வாக்குகளை கழகம் இழந்துவிட்டது. ஏழு இடங்களில் வைப்புத் தொகையை இழந்ததோடு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கும். ஒரு தொகுதியில் நான்காவது இடத்திற்கும் கழகம் தள்ளப்பட்டது.

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கழகத்தை வழிநடத்திச் சென்றபோது கூட்டணிக் கட்சிகள் கழகத்தை நோக்கி வந்த நிலை மாறி கூட்டணிக்காக கையேந்த வேண்டிய நிலை தற்போது கழகத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலைமைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தள்ளப்பட்டதற்குக் காரணம் கழகம் பல அணிகளாக பிளவுபட்டு இருப்பதுதான். இந்த நிலைமை நீடித்தால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய நிலைமை கழகத்திற்கு உருவாகும். இப்பொழுது வெற்றி பெறவில்லை என்றால் எப்பொழுதும் வெற்றி இல்லை என்பதுதான் கள யதார்த்தம். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிட்டது. வாழ்வா, சாவா’ என்ற நிலைக்கு கழகம் தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மனதில் நிலைநிறுத்தி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட நாம் அனைவரும் இந்த நாளில் உறுதியேற்போம்.என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply