அமெரிக்கா, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த கடந்த மாதம் பிரதமர் மோடி உக்ரைன் சென்ற போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தினர்.
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து, மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியாவின் முழு ஆதரவை பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அண்மையில் அவர் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக சென்றிருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.