மத்திய அரசு வகுத்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்துவரும் தமிழ்நாட்டிற்கு, கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதும் வெளியாகி, புதிய கல்வி கொள்கை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு கொண்டுவந்த புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழி கொள்கை திணிப்பு, மாநில உரிமைகளை பறிப்பது போன்ற அம்சங்கள் இருப்பதாக கூறி, இந்த கொள்கையை ஏற்க தமிழ்நாடு மறுத்து வருகிறது. இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பெரும் மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு ஒருமுறை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில், தற்போது வெளிவந்துள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பான தகவல், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தி.மு.க எம்.பி. கணபதி ராஜ்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. “சமக்ர சிக்ஷா அபியான்” திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆசிரியர் பயிற்சிக் கல்வி, தொடக்கக்கல்வி, மேல்நிலைக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த வகையில், 2024-2025 நிதியாண்டில் மொத்தம் சுமார் 34,000 கோடி ரூபாய் கல்வி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும், தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் “பி.எம்.ஸ்ரீ” திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாறாக, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சுமார் 6,000 கோடி ரூபாயும், பீகாருக்கு சுமார் 4,000 கோடி ரூபாயும், இராஜஸ்தானுக்கு சுமார் 3,000 கோடி ரூபாயும் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, கல்வி கொள்கையை ஏற்ற மாநிலங்களுக்கும், ஏற்காத மாநிலங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அப்பட்டமாக காட்டுகிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவமின்மையை உருவாக்குவதாகவும், அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இந்த நிதி ஒதுக்கீடு இன்மையால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.