“தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026”-ஐ வெளியிட்டார் முதலமைச்சர்

Priya
4 Views
2 Min Read

தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நோக்கிய அடுத்தகட்ட நகர்வாக, “தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026” (AVGC-XR Policy 2026)-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.03.2026) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை, அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் தமிழகத்தைப் பன்னாட்டு அளவில் முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த AVGC-XR Policy 2026-ன் படி, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் AVGC-XR சந்தையில் 20 சதவீத பங்கைப் பெறவும், 2 லட்சம் உயர்திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகச் சென்னையில் ‘எல்காட் வியன் (ELCOT Viyan) சிறப்புத்திறன் மையம்’ (Centre of Excellence Hub) நிறுவப்படும். இதன் கிளை மையங்கள் (Spokes) மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 300 முதல் 400 கல்லூரிகளில் AVGC-XR சார்ந்த பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். உலகத் தரத்திலான பயிற்சி மற்றும் கல்வி உதவித்தொகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாக, இந்தத் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க ‘தமிழ்நாடு வளர்ந்து வரும் துறை விதை நிதி’ (TNESSF) மூலம் நிதியுதவிகள் வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள TIDEL NEO பூங்காக்களில் இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இக்கொள்கையின் மற்றொரு முக்கிய அம்சம், ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுப்பான முறையில் வகைப்படுத்துவதாகும். பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் பணத்தைச் சார்ந்து விளையாடும் விளையாட்டுகளைத் தனித்தனியாக வகைப்படுத்தும் வகையில் தேசிய தொழில் வகைப்பாட்டில் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தப்படும். 2030-க்குள் இந்தியாவின் ‘அறிவுசார் சொத்து (IP) தலைநகரமாக’ தமிழ்நாட்டை மாற்றுவதே இந்த AVGC-XR Policy 2026-ன் இறுதி லட்சியமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply