தமிழகத்தில் பள்ளி காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் முன்னேற்றத்திற்கு பணி செய்வதில் எனக்கு பெரும் மகிழ்வாக உள்ளது. பசியை போக்குவதற்காக பெற்றோர்களுக்கு உரிய பாசத்தோடு நான் கொண்டு வந்த திட்டம் தான் காலை உணவு வழங்கும் திட்டம்.
பள்ளி குழந்தைகள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது.
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. மாணவர்கள் படிப்புக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். படிப்பதற்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பதுதான் அரசின் கடமை. குழந்தைகள் எதிர்காலத்தின் சொத்து. காலைஉணவு திட்டம் என்பது முதலீடு. பசி பிணி போக்கும் இத்திட்டம் கடல் தாண்டி கனடாவிலும் செயல்படுத்தப்படுகிறது.