தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்பில் புதிய பகுதி சேர்க்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தை ஒரு தீவிரமான விஷயமாகக் கருதிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாகத் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய பாடப்பகுதி: முன்பு ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற பாடத்தில் நீதித்துறையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் நீதித்துறையில் நிலவும் ஊழல், வழக்குகள் தேக்கம் மற்றும் நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற சவால்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல், சாதாரண மக்கள் நீதியை அணுகுவதைக் கடினமாக்குகிறது” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தலைமை நீதிபதியின் ஆவேசம்: மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் முறையிட்டதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இதனை விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, “நீதித்துறையைத் திட்டமிட்டு களங்கப்படுத்த எவரையும் அனுமதிக்க மாட்டேன். இதன் பின்னால் இருக்கும் நோக்கம் எனக்குத் தெரியும். மற்ற துறைகளில் ஊழலே இல்லாதது போலவும், நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து கிடப்பது போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்க முயல்கின்றனர்,” என்று அனல் பறக்கத் தெரிவித்தார்.
நீதித்துறையின் மாண்பைச் சிதைக்கும் வகையில் இத்தகைய பாடப்பகுதிகள் இடம்பெற்றது வருந்தத்தக்கது என்று தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.

