இந்தியாவின் வரி விதிப்பு முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் (New IT Act) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சாமானிய மக்களும் வரி முறையை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், கடினமான சட்ட மொழிகள் நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட விதிகளுடன் இந்தப் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பிரிவுகள் மற்றும் அத்தியாயங்கள் குறைப்பு
புதிய வருமான வரிச் சட்டத்தின்படி, பழைய சட்டத்தில் இருந்த 819 பிரிவுகளின் எண்ணிக்கை 536 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 47 ஆக இருந்த அத்தியாயங்களின் எண்ணிக்கை 23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர் மற்றும் தணிக்கையாளர்கள் சட்டச் சிக்கல்களின்றி வருமான வரித் தாக்கல் (IT Return) செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான வருமான வரி விதிகள், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நேரடி வரிச் சட்டத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகின்றன.
8 நகரங்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) சலுகை
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படி (HRA) விலக்கு முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 8 பெருநகரங்களில் வசிப்பவர்கள், தங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதம் வரை வரி விலக்குப் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர். மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு 40 சதவீத வரம்பு தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கு ஏற்படும் நன்மைகள்
புதிய Income Tax விதிகளின் நோக்கம், வரி ஏய்ப்பைத் தடுப்பதோடு, வரி செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்கி வேகப்படுத்துவதாகும். எளிமையான படிவங்கள், விரைவான ரீஃபண்ட் (Refund) வசதி மற்றும் குறைவான சட்டப் போராட்டங்கள் ஆகியவற்றை இந்தப் புதிய சட்டம் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் இந்த விதிகள் அமலுக்கு வருவதால், அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் வரிப் பிடித்தம் (TDS) முறையை இந்தப் புதிய சட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

