வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற நீண்ட காலக் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஜனவரி 27, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) முடிவு செய்துள்ளது.
மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இந்த வேலைநிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் போராட்டத்தினால், வார இறுதி விடுமுறைகளுடன் சேர்த்துத் தொடர்ந்து 3 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கிகள் மூடப்படும் நாட்கள்:
- ஜனவரி 25 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை.
- ஜனவரி 26 (திங்கள்): குடியரசு தின அரசு விடுமுறை.
- ஜனவரி 27 (செவ்வாய்): வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம்.
கோரிக்கையின் பின்னணி: கடந்த 2024 மார்ச் மாதமே அனைத்துச் சனிக்கிழமைகளும் விடுமுறை அளிப்பது தொடர்பாக இந்திய வங்கிச் சங்கம் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டது. இருப்பினும், மத்திய அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காததே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகும். 9 முக்கிய வங்கிச் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால், காசோலை பரிவர்த்தனை (Cheque Clearance) மற்றும் நேரடி வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

