டெல்லியில் இருந்து கோவா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் 6E 6271, இயந்திரக் கோளாறு காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புதன்கிழமை இரவு 8:02 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த இண்டிகோ விமானம், நடுவானில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு என்ஜினில் திடீரென செயலிழப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து சுமார் 130 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது, விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு ‘PAN-PAN’ (possible assistance needed) சிக்னல் அனுப்பி, அவசர நிலை அறிவித்தனர். இந்த எதிர்பாராத இயந்திரக் கோளாறு, விமானத்தில் பயணித்த சுமார் 173 பயணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
விமானிகள் உடனடியாக நிலைமையை உணர்ந்து, மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சாமர்த்தியமாகச் செயல்பட்ட விமானிகள், ஒரு என்ஜினை மட்டுமே கொண்டு விமானத்தை இயக்கினர். மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டன. விமானம் வானிலேயே மூன்று முறை வட்டமிட்ட பிறகு, இரவு 9:52 மணியளவில் பாதுகாப்பாக ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இரவு 9:35 மணியளவில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், அனைத்து பயணிகளும் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவசரநிலை அறிவிப்பு இரவு 9:57 மணியளவில் திரும்பப் பெறப்பட்டது.
இந்த விமானம் ஏர்பஸ் A320neo ரகத்தைச் சேர்ந்தது (பதிவு எண்: VT-IZB), மேலும் இது பிராட் & விட்னி (Pratt & Whitney) நிறுவனத்தின் PW1127G-JM என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின்களில் கடந்த சில ஆண்டுகளாகவே நம்பகத்தன்மை தொடர்பான சிக்கல்கள் நிலவி வருகின்றன. இண்டிகோ விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் பல இண்டிகோ விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன அல்லது புறப்படும் இடத்திற்கே திரும்பியுள்ளன. ஜூலை 9 அன்று பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானம் பறவை மோதியதால் மீண்டும் பாட்னாவிலேயே தரையிறக்கப்பட்டது. ஜூன் 19 அன்று டெல்லியில் இருந்து லே நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதேபோல், ஜூன் 21 அன்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்திலும், ஜூலை 8 அன்று இந்தூரிலிருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திலும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டன.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ விமானங்களில் ஏற்படும் இந்த தொடர் இயந்திரக் கோளாறுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை இண்டிகோ நிறுவனம் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை ஆய்வு செய்யும்படி DGCA அறிவுறுத்தியுள்ளது. விமானப் பயணிகள் மத்தியில் அதிகரித்து வரும் கவலையைப் போக்கும் வகையில், இண்டிகோ நிறுவனம் தனது விமானப் பராமரிப்புச் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த இண்டிகோ விமான விபத்து தவிர்க்கப்பட்டது, விமானிகளின் சமயோசித புத்திக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கும் ஒரு சான்றாக அமைகிறது. பாதிக்கப்பட்ட விமானம் தேவையான பழுதுபார்ப்பு மற்றும் சோதனைகளுக்குப் பிறகுதான் மீண்டும் சேவைக்கு வரும் என்றும், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.