தமிழகத்தில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL), தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான (Gas Cylinder Booking) இடைவெளி 35 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் இடைவெளியில் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கேஸ் ஏஜென்சிகள் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 35 நாட்கள் எனப் புதிய காலக்கெடுவை அறிவித்துள்ளதால், மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். “ஒன்றிய அரசின் அறிவிப்பை நம்புவதா அல்லது ஏஜென்சிகளின் தகவலை நம்புவதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
உணவகங்கள் மற்றும் இல்லத்தரசிகள் பாதிப்பு
ஏற்கனவே சந்தையில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டரின் விலை 2,000 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தற்போது முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறிய உணவகங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பல இடங்களில் விறகு அடுப்புகளை மக்கள் நாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் மோதல்
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை விமர்சித்துள்ள நிலையில், இந்த புதிய காலக்கெடு அறிவிப்பு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “கோவிட் காலத்தைப் போல” நிலைமை இருப்பதாகப் பிரதமர் பேசியது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் விநியோகச் சங்கிலியில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

