கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் சப்ளை அடியோடு நிறுத்தம்: தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், டீ கடைகள் மூடல்

Priya
7 Views
2 Min Read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், தமிழகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானில் நிலவும் அசாதாரண சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்கான Cylinder விநியோகம் அடியோடு முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று ஓட்டல்கள், டீ கடைகள் மற்றும் பேக்கரிகள் தங்களது சேவையைத் தொடர முடியாமல் திணறி வருகின்றன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர ஏவுகணைத் தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலைகுலைவை ஏற்படுத்தியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் ஓமன் வளைகுடாவிலேயே தேங்கி நிற்கின்றன. இதனால், திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் (LPG) இருப்பு இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், பொதுமக்களின் சமையல் தேவைக்கான வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக Cylinder உற்பத்தியை எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

தமிழகத்தில் சென்னை எண்ணூர், செங்கல்பட்டு, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள இந்தியன் ஆயில் பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து வர்த்தக சிலிண்டர் விநியோகம் நேற்று மதியத்திற்குப் பிறகு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் உணவு தயாரிப்பு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. “சமைக்க அதிக நேரம் தேவைப்படும் உணவு வகைகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டோம்; தற்போது மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய உணவுகளை மட்டுமே வழங்கி வருகிறோம்” என ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள பிரபல உணவகங்கள் பலவற்றில் “சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுகள் கிடையாது” என்ற அறிவிப்புப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அதே நிலை உருவாகியுள்ளது. இன்று இருக்கும் கையிருப்பு சிலிண்டர்களை வைத்து சமாளிக்கும் உணவகங்கள், நாளைக்குள் விநியோகம் சீராகாவிட்டால் கடைகளை முழுமையாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்துள்ளன.

சிறிய டீக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், “எங்களிடம் இருக்கும் சிலிண்டர்கள் நாளை வரை மட்டுமே வரும். அதன் பிறகு புதிய Cylinder வராவிட்டால் கடையைப் பூட்ட வேண்டியதுதான். இது கொரோனா காலத்தை விட மோசமான பாதிப்பாக உள்ளது,” எனத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சென்னையில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் முழுமையாக உணவகங்களையே நம்பி இருப்பதால், நாளை முதல் ஒரு மிகப்பெரிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து முறையிட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply