சணல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026-27-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் குழு இன்று (24.02.2026) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் உள்ள பிரதமரின் புதிய அலுவலகமான ‘சேவா தீர்த்தத்தில்’ நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
புதிய விலை விவரங்கள்: இதன்படி, தரமான சணல் (TD-3 grade) ஒரு குவிண்டாலுக்கு ₹275 உயர்த்தப்பட்டு, தற்போது ₹5,925 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025-26 பருவத்தில் இதன் விலை ₹5,650 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு மூலம் சணல் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை விட 61.8 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்று அமைச்சரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கூடுதல் உறுதிமொழி: ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்துப் பேசுகையில், “2014-15 ஆம் ஆண்டில் ₹2,400 ஆக இருந்த சணல் விலை, தற்போது 2.5 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியச் சணல் கழகம் (Jute Corporation of India) தொடர்ந்து கொள்முதல் பணிகளை மேற்கொள்ளும். சணல் ஆதார விலை உயர்த்தப்பட்டதால் ஏற்படும் நிதி இழப்புகளை முழுமையாக ஒன்றிய அரசே ஏற்கும்,” என்று உறுதியளித்தார். இம்முடிவின் மூலம் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் சணல் விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.

