ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 40 பயணிகளுடன் பெங்களூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தீ விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர். ரேவந்த் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில்,
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான தீ விபத்தில் உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் , அவர்களின் குடும்பத்துடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

