ஊதியக்குழு அமைப்பதில் தாமதம்: ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அமைப்பே சம்பளக் கமிஷன் (Pay Commission) ஆகும். நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளைத் திருத்துவதற்காக, இந்த அமைப்பு பொதுவாக 10 வருடங்களுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் சம்பளமும், ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதியக்குழுவின் காலம் டிசம்பர் 2025-இல் நிறைவடையும் நிலையில், 8ஆவது ஊதியக்குழு நடப்பாண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சரவையின் ஒப்புதலும், நடைமுறைத் தாமதமும்
மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, 8ஆவது ஊதியக்குழுவை அமைத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அமைச்சரவை ஒப்புதல் அளித்து பல மாதங்கள் கடந்தும், ஊதியக்குழுவை அமைப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கை (Official Notification), குறிப்பு விதிகள் (Terms of Reference) மற்றும் உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்ட எந்த ஒரு நடைமுறையும் இதுவரை தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஊதியக்குழு அறிக்கையின் அமலாக்கத் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2028 வரை தாமதம் ஏற்பட வாய்ப்பு
பொதுவாக, ஒரு ஊதியக்குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதை அரசு ஏற்று நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். முந்தைய 6ஆவது மற்றும் 7ஆவது ஊதியக்குழுக்களின் வரலாற்றை ஆய்வு செய்தால், இந்த உண்மை தெளிவாகிறது:
- 6ஆவது ஊதியக்குழு: அமைக்கப்பட்டு 22-24 மாதங்களில் அமலானது.
- 7ஆவது ஊதியக்குழு: அமைக்கப்பட்டு சுமார் 33 மாதங்களில் (2 ஆண்டுகள் 9 மாதங்கள்) அமலானது.
இந்த நடைமுறை காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 8ஆவது ஊதியக்குழுவை அமைக்கும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் தாமதமாவதால், அதன் இறுதி அறிக்கை 2027-இன் இறுதியில் தயாராகி, அது மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு அமலுக்கு வர 2028-ஆம் ஆண்டு வரை ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 8ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் பின்னோக்கிப் பரிசீலித்து (Retrospectively) அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு தாமதமாகக் கிடைத்தாலும், நிலுவைத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.