தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழிந்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’அக்டோபர் 16 ஆம் தேதி வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்,
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்
அதேபோல வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.