#முதல் விமானப் பயணம்!
‘Your Attention Please’ என்ற குரல் கேட்டதும் நாங்கள் அனைவரும் தயாராகிவிட்டோம்..
ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்க ஆரம்பித்தோம்..
கையில் உள்ள பயணச்சீட்டினை பரிசோதித்து, அதை இரு துண்டாக கிழித்து, ஒரு பகுதியை கையில் கொடுத்தனர்.
விமானத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..
முதல் முறை விமானப் பயணம் மேற்கொள்கிறோம் என்ற பதட்டம் இல்லாமல் நான் நடந்து சென்றது எனக்கே ஆச்சர்யம்தான்…
விமானத்திற்குள் நுழைந்ததும் என்னுடைய இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு வழியாக அமர்ந்து விட்டேன்..
அலுவலக நண்பர்களும், அவரவர் இடங்களில் தங்களை இருத்திக் கொண்டனர்.
எனக்கு அருகில் கிஷானும், நிர்மலாவும் அமர்ந்திருந்தனர். ஒரு விதத்தில் அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காரணம் யாரோ முகம் தெரியாதவர்களோடு அமர்ந்து கொண்டு பயணிப்பதென்பது கொஞ்சம் அசௌகர்யம்தான்.
விமானம் மெல்ல மெல்ல தன்னுடைய பயணத்தினை ஆரம்பிக்க தயாரானது..
மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த விமானத்தினை ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்..
மனம் பதட்டத்தில் துடித்தது. கைகள் உதறல் எடுத்தது.. இடுப்பில் பெல்ட்டை அணிந்து கொண்டேன். இதயம் இன்னும் தாறுமாறாக அடித்துக் கொண்டது.
வெளியே காண்பித்துக் கொள்ளாமல் எவ்வளவு நேரம் தான் நடிப்பது. அருகில் இருந்த கிஷானின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்…
விமானம் ரன்வேயில் பயணிக்க ஆரம்பித்தது..
வேகம்… வேகம்.. வேகம் என அது பயணித்த வேகத்தில் இருப்பு கொள்ளாமல் தவித்தேன்..
கிஷானுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்திருந்தேன்… இருப்பினும்… அந்த படபடப்பு அடங்குவதற்கு எனக்கு நீண்ட நேரம் ஆனது.
விமானம் தன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொண்டு உயரப்பறக்கும் நொடிகளில் என்னையும் அறியாமல் கத்தியே விட்டேன்.. நிச்சயமாக என் அருகில் இருந்த அனைவரும் சிரித்திருப்பார்கள்…
வாழ்க்கை அழகானது.. அதில் வாழ்வதும் அழகானது.. என்னுடைய முதல் விமானப் பயணம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று இருக்கும் போது நான் என்ன செய்ய முடியும் அனுபவிப்பதைத் தவிர…
விமானம் மெல்ல மெல்ல உயரப் பறக்கத் தொடங்கியது..
சகஜ நிலையை அடைந்தேன். மனம் பக்குவப்பட்டது..
விமானத்தின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்த்தேன்..
கீழிருந்து உயரத்தைப் பார்க்கும் போது வியப்பை ஏற்படுத்துவது மாதிரி, உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் போதும் வியப்பாகவே இருக்கிறது..
மேகங்களுக்கு நடுவே விமானம் சென்று கொண்டிருந்தது..
”இந்த மேகம் நகர்கிறது பார்த்தியா” என நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது…
”அது என்னடா சின்ன ஏரோப்பிளேன்.. அதுக்குள்ள எப்படிடா அத்தனை பேரு உட்கார முடியுது… பெரிய றெக்கையா இருக்கே… றெக்கைக்குள்ளயும் ஆளுங்க இருப்பாங்களா..? ” போன்ற அசட்டுத்தனமாக கேள்விகள் ஞாபகத்துக்கு வந்து போயின..
புன்னகையோடு அந்த விமானப் பயணத்தை ரசிக்கத் தொடங்கினேன்..
இது ஒரு சாதாரண விஷயம் தானே எதற்கு இத்தனை ஜோடனை? என்று கேட்பவர்களுக்கு..இது சிலருக்கு சாதாரண நிகழ்வாக இருக்கலாம்.. ஆனால் பலருக்கு நிறைவேறாத கனவு… இன்று என் கனவு நினைவான தருணம்…!
கண்களை மூடி காலையில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன்…
அதிகாலை 5 மணி… சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய போது என்னையும் அறியாமல் ஒரு வித உணர்வு…
எத்தனையோ முறை இதே விமான நிலையத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக வந்திருக்கிறேன்…அப்போதெல்லாம் விமான நிலையத்தின் வாயிலோடு நின்று சென்றிருக்கிறேன்.. ஒருமுறைகூட விமான நிலையத்திற்குள் நுழைய வேண்டும் என எண்ணியதில்லை.. ஆனால், இப்போதோ முதல்முறையாக பயணம் செய்வதற்காக வந்திருக்கிறேன். ஒரு பயணியாக விமான நிலையத்தினுள் நுழைகிறேன்..
அந்த இனிமையான தருணங்களை அனுபவித்தேன்…
போர்டிங் பாஸ்… இமிக்கிரேஷன்… வெயிட்டிங் ஹால்… என அத்தனையும் கடந்து இப்போது விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்..
நீலநிறப் போர்வை போர்த்திய ஆகாயத்தின் நடுவே நீச்சலடித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது எங்களை சுமந்து சென்ற Air Asia விமானம்…
எங்களின் 7 Miles Per Second நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு கொடுத்த மிக அழகான தருணம் தான் இந்த மலேசிய பயணம்…
Yes…மலேசியாவில் 4 நாட்கள் சுற்றுலா..
மலேசியா என்று கூறத் தொடங்கியதிலிருந்தே அலுவலகம் முழுக்க மலேசிய பயணம் குறித்த பேச்சுதான் பிரதானமாக இருந்தது…
என்ன ட்ரெஸ் எடுக்கலாம்… எப்ப ஷாப்பிங் போகலாம்.. அங்க என்ன ஸ்பெஷல்.. மலேசியாவில நைட்கிளப் இருக்கா.. போன்ற பல குரல்கள்…
இப்போது அவர்கள் அனைவரும் எதையெல்லாம் பேசி மகிழ்ந்து சிலாகித்தார்களோ.. அதை நேரடியாக பார்த்து மகிழ இருக்கின்றனர்..
இந்த பயணம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்..
மொத்தமாக 34 பேரோடு எங்கள் பயணம் மலேசியாவை நோக்கி தொடங்கியிருக்கிறது…
ஐ திங்.. லேண்டிங் ஆகப் போறோம்னு நினைக்கிறேன்… இறங்கிட்டு வரவா..!!!
– தொடரும் –
– ர-ஆனந்தன்