அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது நாடு முழுவதும் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை, தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதனால், மார்ச் மாதம் இறுதியில் எய்ம்ஸ் கAட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் வாஸ்து தினமான இன்றைய தினம் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நேரடியாக நிதி வழங்கிய நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் கட்டுவதற்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட கடன் பெறுவதற்கு கடன் ஒப்பந்தம் கடந்த 2021 மார்ச் மாதத்தில் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82 சதவீதம் தொகையான ரூ1627.70 கோடியை ஜைக்கா நிறுவனத்திடம் கடனாக பெறுவது எனவும், மீதமுள்ள தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜைக்கா நிறுவனத்திடம் தற்போது வரை கடன் பெற முடியவில்லை. இடையில் கொரோனா பேரிடர் பாதிப்பு போன்ற பல காரணங்களால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. மதுரையுடன் அறிவித்த நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மருத்துவமனைக்கு தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தையும், அருகில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் நான்கு வழி இணைப்பு சாலை ஒன்றும் போடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரைக்கு வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பையும் சமீபத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஒப்புதல் கிடைக்கப்பெற்று, மார்ச் மாதத்தின் இறுதியில் கட்டுமான பணிகள் துவங்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் வாஸ்து தினமான இன்று வாஸ்து பூஜையுடன் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.