நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் நகர்ப்புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மக்கள் நீதி மய்யமும் திமுகவுடன் இணக்கமாகவே செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு பல மேடைகளை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டதோடு, உதயநிதி அமைச்சரானதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளை தமிழக அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தின் நலன்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் கமல்ஹாசனின் சிந்தனையோடு ஒத்துபோகிறவர்களுடன் கூட்டணி என்றும் மக்கள் நீதி மய்யம் இரண்டு நிபந்தனைகளை விதித்தது. அதே சமயம் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் முதற்கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ளனர். விசிக மற்றும் முஸ்லீம் லீக்குடன் வரும் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு அதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக தொகுதி பங்கீடு குழுவினர் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். இந்த நிலையில் முதல்வரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விரைவில் நேரில் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த தகவல் முக்கியமானதாக மாறியுள்ளது.

திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் 2 மக்களவைத் தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன் வரும் 12ஆம் தேதி தமிழகம் திரும்பியதும் முதல்வருடனான அரசியல் ரீதியான சந்திப்பு நிகழும் எனக் கூறுகிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here