இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா?. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது வியப்பு அளிக்கிறது. பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள் என திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப் பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்று கொள்கிறது என்பதும் உறுதியாகிறது. ராமரை கடவுளாக வணங்கும் மக்கள், ராமரின் ஆட்சி என்பது வறுமை – ஏழ்மை, பசி – பஞ்சமற்ற, கொலை – கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப் போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர்.

அப்படி ஒரு ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம் தான் ராமரின் ஆட்சியா?

தமிழக சட்ட அமைச்சரின் திராவிட ராமர் ஆட்சி பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? என்பதை ஸ்டாலின் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here