ரஷ்யாவில் பதின் வயதுச் சிறுவர்களுக்கு ராணுவப் பயிற்சி: எதிர்காலப் போருக்காகப் பிள்ளைகளைத் தயார்படுத்தும் புடின் அரசு!

ராணுவ வீரர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலப் போர்களுக்காகப் பள்ளி மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் ரஷ்யா.

133 Views
2 Min Read
Highlights
  • ரஷ்யாவில் பதின் வயதுச் சிறுவர், சிறுமிகளுக்கு ராணுவப் பயிற்சி.
  • மாணவர்கள் உண்மையான துப்பாக்கிகளைக் கொண்டு சுடும் பயிற்சி பெறுகின்றனர்.
  • எதிர்காலப் போர்களுக்குத் தயாராகும் ரஷ்ய அரசின் புதிய திட்டம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, தற்போது ராணுவ வீரர்களின் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், ரஷ்யாவில் பதின் வயதுச் சிறுவர், சிறுமிகளுக்கு ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படுவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம், எதிர்காலப் போர்களுக்குப் புதிய படையினரை ரஷ்யா தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையான ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி

இந்த ராணுவப் பயிற்சியில், பதின் வயது மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு உண்மையான துப்பாக்கிகளைக் கொண்டு சுடும் பயிற்சி, கையெறி குண்டுகளை வீசும் பயிற்சி, ராணுவத்தினருக்கான கடுமையான உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இளைய தலைமுறையினரைத் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ சேவைகளுக்குத் தயார்ப்படுத்துவதே ரஷ்ய அரசின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவின் தற்போதைய ராணுவ நிலை

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போர் நீடித்து வருவதால், வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரஷ்யா பல்வேறு வழிகளைப் பின்பற்றி வருகிறது. தனியார் பாதுகாப்புப் படையினர் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வடகொரியா போன்ற நட்பு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு உதவிக்கு அனுப்பியுள்ளன. இதுதவிர, ரஷ்யாவில் படிப்பு அல்லது வேலைக்காக வந்த வெளிநாட்டவர்களையும் வலுக்கட்டாயமாக ராணுவப் பணிகளில் ஈடுபடுத்துவதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

புதிய தலைமுறைக்கான பயிற்சித் திட்டம்

இந்தக் கடுமையான சூழலில், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு ரஷ்ய அரசு இந்தப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பதின் வயது முதலே ராணுவ மனப்பான்மை மற்றும் தேசபக்தி உணர்வை மாணவர்களிடையே வளர்ப்பதன் மூலம், எந்த நேரத்திலும் ஒரு பெரிய போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பயிற்சித் திட்டம், எதிர்கால ரஷ்ய ராணுவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இளம் வயதிலேயே போருக்கான மனநிலையை உருவாக்குவது, குழந்தைகளின் மனநலனைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply