இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தொடர்வதால், காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 2023-இல் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. இந்த மோதலில் இதுவரை 62,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், போரினால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் காஸா நகரம் தற்போது பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது.
இது குறித்து ஐபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸா நகரில் ஏற்பட்டுள்ள பஞ்சம் இயற்கை சீற்றத்தால் அல்ல, முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது. உடனடியாக இதை நிறுத்தி மாற்றி அமைக்க முடியும். இது தொடர்பான விவாதங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது. போரினால் ஏற்பட்ட மனிதாபிமானமற்ற சூழல், காஸா முழுவதும் கொடிய பசியை வேகமாகப் பரப்பி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
பஞ்சத்தை அளவிட IPC பயன்படுத்தும் அளவுகோல்கள்
ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பஞ்சத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக அறிவிக்க, ஐபிசி அமைப்பு மூன்று முக்கிய அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது. அவை:
- உணவுப் பற்றாக்குறை: குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது 20% குடும்பங்கள் முழுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும்.
- ஊட்டச்சத்துக் குறைபாடு: 30% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட வேண்டும்.
- பசியால் ஏற்படும் உயிரிழப்புகள்: ஒவ்வொரு 10,000 பேருக்கும் இரண்டு பேர் பசியால் தினமும் இறக்க வேண்டும்.
இந்த மூன்று அளவுகோல்களும் தற்போது காஸா சிட்டியில் பூர்த்தி ஆகியுள்ளன. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், காஸாவில் மட்டும் சுமார் 5,00,000 மக்கள் பஞ்சத்தில் இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழல் நீடித்தால், செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 6,41,000-ஆக, அதாவது, மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக, அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காஸாவில் மனிதாபிமான உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயரும் எனவும் ஐபிசி எச்சரித்துள்ளது.
உலக அளவில் பஞ்சம்: காஸாவும் பட்டியலில் சேர்ப்பு
ஐபிசி என்பது, உலக அளவில் உணவு நெருக்கடிகளை ஆய்வு செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கும் ஒரு முன்னணி அமைப்பு. ஐ.நா.வின் சுகாதாரம், உணவு உதவி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் உலக வங்கி போன்ற பல்வேறு குழுக்களின் நிபுணர்களைக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. சுமார் 50 நிபுணர்கள் நடத்திய ஆய்வுக்குப் பின்னரே, காஸா நகரம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், சோமாலியா (2011) மற்றும் தெற்கு சூடான் (2017) ஆகிய நாடுகள் பஞ்சத்தைக் கண்டன. இந்த ஆண்டு, சூடானின் வடக்கு டார்பூரின் சில பகுதிகளும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, அந்தப் பட்டியலில் காஸா நகரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்டதால், போரை உடனடியாக நிறுத்தி, மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டால் மட்டுமே, பேரழிவைத் தவிர்க்க முடியும் என ஐபிசி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் தங்கள் பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்களைத் தொடர்வோம் என அறிவித்துள்ள நிலையில், காஸாவின் மனிதாபிமான நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.