மாற்றத்திற்கான விதைதான் புரட்சி. அந்தப் புரட்சி பெரிய அளவில் வெடிக்கும்போது, எப்பேர்ப்பட்ட வலுவான அரசும், அதிகாரமும் அசைக்க முடியாத சறுக்கலைச் சந்திக்கும். இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் வரலாற்றை மாற்றியமைத்த புரட்சிகள் இதற்குச் சான்று. அதேபோல, இன்றும் சில நாடுகளில் மக்களின் அதிருப்தி போராட்டங்களாக வெடித்து, உலகத்தின் கவனத்தைத் தன்வசம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக உலகின் பல நாடுகளின் நிர்வாக ஊழல், பொருளாதாரச் சரிவு மற்றும் வேலையின்மைக்கு எதிராகக் கிளம்பியுள்ள இளைஞர் போராட்டங்கள் ‘ஜென் இசட்’ (Gen Z) புரட்சி என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இந்த இளைஞர் போராட்டங்கள் வன்முறை, உயிரிழப்புகள், ஆட்சி மாற்றங்கள் எனப் பல விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்திய வாரங்களில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ‘ஜென் இசட்’ போராட்டங்கள் தீவிரமாகப் பரவி வருகின்றன. மடகாஸ்கர், மொராக்கோ, நேபாளம், பெரு, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த அதிருப்தி அலையில் சிக்கியுள்ளன.
மொராக்கோவில் கால்பந்து திருவிழா Vs மக்கள் அவலநிலை:
மொராக்கோவில், தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கோரி, கசபிளாங்கா உட்பட 12 முக்கிய நகரங்களில் ‘Gen Z 212’ என்ற இளைஞர் குழுவினர் கடந்த சில நாட்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2030ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளுடன் இணைந்து நடத்த மொராக்கோ அரசு பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதற்காக அரசுப் பணம் பன்மடங்கு செலவிடப்படும் நிலையில், பல பள்ளிகளும் மருத்துவமனைகளும் நிதிப் பற்றாக்குறையால் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டு இந்த இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்.
தலைவர் இல்லாத இந்த ‘Gen Z 212’ இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்கள், மொராக்கோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய மக்கள் திரளாக மாறியுள்ளது. அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, ஆர்ப்பாட்டக்காரர்களில் சுமார் 70% பேர் சிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. மொராக்கோவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதுதான் இந்தப் போராட்டங்கள் வெடிக்க முக்கியக் காரணமாகும் என்று அந்நாட்டின் புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 உலகக் கோப்பைக்கு முன்னதாக பிரேசிலிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடந்தன என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மடகாஸ்கரில் இருள் சூழ்ந்த போராட்டம்:
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடந்த இளைஞர் போராட்டங்களின் சாயலில் இருந்தது.
அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. இந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கரில், நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாக இருப்பது போராட்டத்திற்கு மேலும் வித்திட்டுள்ளது.
பெரு மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் அதிருப்தி:
இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவில், இளைஞர்கள் தனியார் ஓய்வூதிய நிதியில் பணம் செலுத்த வேண்டும் என்ற சீர்திருத்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. ஊழல், பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் அதிகரித்துவரும் குற்றங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பங்களித்துள்ளன.
அடுத்து, ஆசிய நாடான பிலிப்பைன்ஸில், வெள்ள நிவாரணத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய பில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் டாலர்கள் இழக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 20 வெப்ப மண்டலப் புயல்களைச் சந்திக்கும் இந்த நாடு, இயற்கைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில், வெள்ளத் திட்டங்களில் ஏற்பட்ட ஊழலால் சுமார் 1.85 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. மக்கள் நலனுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் ஊழல் மூலம் வீணடிக்கப்படுவது ‘ஜென் இசட்’ தலைமுறையினரைத் தெருக்களுக்குக் கொண்டு வந்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் இந்த இளைஞர் போராட்டங்கள், பெரும் சமூக மாற்றத்திற்கான விதையாக முளைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.