பிரான்சின் மிகப்பெரிய அணுமின் நிலையங்களில் ஒன்றான கிரேவ்லைன்ஸ் அணுமின் நிலையம், ஜெல்லிமீன் படையெடுப்பால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வடகடல் பகுதியில் அதிகரித்து வரும் வெப்பமயமாதல் காரணமாக, ஜெல்லிமீன்களின் பெருக்கம் அதிகரித்து வருவதே இந்த அசாதாரண நிகழ்வுக்கு முக்கிய காரணம் என்று அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரேவ்லைன்ஸ் அணுமின் நிலையம், 900 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. நாட்டின் கணிசமான மின் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆலை, வடகடலில் இருந்து வரும் நீரைக் கொண்டு குளிர்விக்கப்படுகிறது. இந்நிலையில், அணுமின் நிலையத்தின் வடிகட்டி டிரம்களில் கணிக்க முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஜெல்லிமீன்கள் நுழைந்ததால், அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அணு உலைகள் மூடப்பட்டதற்கான காரணம்
பிரெஞ்சு எரிசக்தி குழுமமான எலக்ட்ரிசைட் டி பிரான்ஸ் (EDF), இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. டன்கிர்க் மற்றும் கலேஸ் நகரங்களுக்கு இடையே உள்ள கிரேவ்லைன்ஸ் கடற்கரைப் பகுதிகளில், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரித்ததால் ஜெல்லிமீன்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அணுமின் நிலையத்தில் உள்ள நான்கு அணு உலை அலகுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று மூன்று அணு உலைகள் மூடப்பட்ட நிலையில், மறுநாள் நான்காவது அணு உலையும் மூடப்பட்டது.
முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், இந்த ஆலை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என EDF தெரிவித்துள்ளது. நாளை முதல் அணுமின் நிலையம் மீண்டும் இயங்கும் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
அணுமின் நிலையங்களுக்கு ஜெல்லிமீன்களால் என்ன ஆபத்து?
ஜெல்லிமீன் கூட்டங்கள் அணுமின் நிலையங்களை செயலிழக்கச் செய்யும் தன்மை கொண்டவை என அணு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களிலும் இதுபோன்று பலமுறை அணு உலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெல்லிமீன்களின் படையெடுப்பு காரணமாக, 2013-ல் ஸ்வீடனில் மூன்று நாட்கள் அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதேபோல், 1999-ல் ஜப்பானில் ஏற்பட்ட இதேபோன்ற சம்பவம், மின் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
பசிபிக் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த ஆசிய மூன் ஜெல்லிமீன் இனம், 2020-ம் ஆண்டில் முதன்முதலில் வடகடலில் காணப்பட்டது. இந்த இனம், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களிலும் ஏற்கெனவே இதேபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கடல் உயிரியல் ஆலோசகர் டெரெக் ரைட், “வெப்பநிலை அதிகரிக்கும்போது ஜெல்லிமீன்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும். வடகடல் போன்ற பகுதிகள் வெப்பமடைந்து வருவதால், அவற்றின் இனப்பெருக்க வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். அதிகப்படியான மீன்பிடித்தல், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையே ஜெல்லிமீன்கள் செழித்து வளர முக்கிய காரணங்கள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.