இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் ஒன்று பள்ளி வளாகத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறிய கோர விபத்தில், இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகே உள்ள உதரா பகுதியில், மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த வளாகத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கதேச விமானப் படையைச் சேர்ந்த F-7BGI ரக போர் விமானம் ஒன்று அப்பகுதியில் வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது.
பயிற்சியின் போது, போர் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, நேராக மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர விபத்தால் வளாகம் முழுவதும் பெரும் புகை மண்டலமாக மாறியது. விபத்து நடந்ததும் உடனடியாக மீட்புப் படையினர் மற்றும் அவசர சேவை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சீன J-7 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான F-7BGI, வங்கதேச விமானப்படையில் முக்கிய போர் விமானங்களில் ஒன்றாகும். இந்த விமானம், பயிற்சியின் போது திடீரென ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை சுற்றி உள்ள கட்டிடங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி லெப்டினன்ட் முகமது துக்கிர் இஸ்லாம் உட்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக வங்கதேச அரசு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.