மத்திய தொல்லியல் துறை இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிடுகிறது. இந்தியிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றை வரலாற்று மாணவர்களும் ஆய்வாளர்களும் விரும்பி படிக்கின்றனர்.

மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல பிரிவு வெளியிடும் நூல்களில் தமிழகக் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்ட நூல்களே பிரதானமாக உள்ளன. தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் புராதன சின்னங்கள் பற்றிய கதைகளும் உள்ளன.

மேலும், ஆதிச்சநல்லுார் குறித்த அகழாய்வு பற்றிய நுால்களும் வெளிவந்துள்ளன. இவற்றை, தமிழ் மொழியை மட்டுமே அறிந்த ஆய்வாளர்களால் படிக்க முடியவில்லை. அவற்றில் உள்ள கலைச்சொற்கள், துறை சாராத ஆய்வாளர்களுக்கு புரிவதில்லை. அதனால், தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மத்திய தொல்லியல் துறைக்கு, தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வட்டார அலுவலகங்கள் உள்ளன. அவற்றின் அதிகாரிகள், தமிழக கல்வெட்டுகள், புராதன சின்னங்கள், அகழாய்வுகள் குறித்த ஆங்கில நுால்களை, தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி பெற வேண்டும்.

மொழிபெயர்ப்பு பணியால் அவர்களின் பணிகள் பாதிக்கப்படுவதாக கருதினால், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தொல்லியல் அதிகாரிகள், அலுவலர்களிடம் அந்த பணியை ஒப்படைக்கலாம். அது, எங்களை போன்ற தமிழ் மட்டும் அறிந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here