பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ’லப்பர் பந்து’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், ’லப்பர் பந்து’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்த சூழலில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தப் படத்தினை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது “லப்பர் பந்து படத்தை பார்த்தேன். இது தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி அற்புதமாக எடுத்துள்ளனர். ஊரில் விளையாடும் கிரிக்கெட்டை மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளார்கள்.
நானும் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து விளையாடித்தான் கிரிக்கெட் விளையாட வந்தேன். இதனால், என்னால் எல்லாவற்றையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. அற்புதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். தமிழ்ப் படங்களில் இந்தப்படம் நன்றாக மதிப்பிடப்படும்.” என தெரிவித்தார்.