கார்களில் கட்சி கொடி கட்டப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனியார் வாகனத்தில் காவல்துறை, அரசு, ஊடகங்கள், வழக்கறிஞர்கள் அல்லது மருத்துவர்கள் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டாம். மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “கார்களில் ஸ்டிக்கர் ஒட்டும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை, ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி கூறியதாவது:
கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் வலம் வருகின்றன. கார்களில் இன்னும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அது முறைப்படுத்தப்படவில்லை. நகர சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனி வழி ஏற்படுத்த வேண்டும்.
சாலை விபத்துகளை தடுக்க, பள்ளி, கல்லுாரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ‘கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.